அமெரிக்காவின் ஓட்டம் என்னவாகும் ஆப்கன்?

அமெரிக்காவின் ஓட்டம் என்னவாகும் ஆப்கன்?

இருபது ஆண்டுகள், பல லட்சம் கோடி ரூபாய் செலவு, ஆயிரக்கணக்கில் வீரர்கள் இழப்பு... இவ்வளவுக்கும்பின் ஆப்கானிஸ்தானை விட்டு ஓட்டம் பிடித்துவிட்டது அமெரிக்கா.

ஆனால் இப்போது நடந்திருப்பது என்ன? எந்த தாலிபானை எதிர்த்து போர் புரிந்தார்களோ அவர்களிடமே நேருக்கு நேராக பேச்சு வார்த்தை நடத்தி, எந்த நிபந்தனையும் விதிக்காமல், விட்டால் போதும் என்று விலகிச்  சென்றுவிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா கட்டி எழுப்பிய ஆப்கான் ராணுவம், சின்ன முனகல்களை மட்டும் ஆங்காங்கே வெளிக்காட்டிவிட்டு, அப்படியே சரணடைந்துவிட்டது. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்கள்.

இதற்குக் காரணம், அமெரிக்கா ஆப்கனில் ராணுவத்தை உருவாக்கி பயிற்சி அளித்தபோது அதில் சேர தாலிபன்களே தங்கள் ஆட்களை சாதாரண ஆட்கள் போல் அனுப்பி வைத்தார்கள்.

பயிற்சிக்கு பயிற்சியும் ஆச்சு; சரியான சமயத்தில் காலை வாரிவிடுகிற மாதிரியும் ஆச்சு என்பதுதான் இதன் பின்னணி.

காபூல் வீழ்ந்த நிலையில் அதன் விமான நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகள் வசம் உள்ளது. ஆப்கானில் இருந்து வெளியேற விரும்பும் மக்களையும் தங்கள் ஒப்பந்தப் பணியாட்-களையும் ஏற்றிச்செல்ல, விமானப் போக்குவரத்துக்காக விமான-நிலையத்தை தம் கையில் வைத்துள்ளது அமெரிக்காவும் நேட்டோ படையும்.

இவ்வளவு நாள் அமெரிக்க படைகளுடன் ஒத்துழைத்தும் உதவி செய்தும் வாழ்ந்து வந்த ஆப்கான் மக்கள், தாலிபனைக் கண்டு அஞ்சினார்கள். படித்து பட்டம் பெற்றிருந்த பெண்கள் நிலை மிக கலவரத்தில் இருந்தது. முதல் நாள் கிளம்பிய விமானங்களில் எப்படியும் இடம்பிடித்துவிடவேண்டும் என்று திமிறியடித்தது கூட்டம். விமானத்தின் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அதன் சக்கரங்களில் ஏறிப் பயணம் செய்ய முயன்று கீழே விழுந்து இறந்த மனிதர்களைக் கண்டு திகைத்தது உலகம்!

இப்படி விமானம் மூலம் தப்பித்த ஆயிரக்கணக்கானோரின் அனுபவங்கள் ஆங்காங்கே பதிவாகிக்கொண்டிருக்கின்றன. பிரிட்டனுக்கு தன் இரண்டு தங்கைகளுடன் வந்து சேர்ந்திருக்கிறார், ஆப்கான் இளம் பெண் ஒருவர். ‘கடந்த பதினாறு பதினெட்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டு படித்துப் பெற்ற பட்டங்கள் தாலிபானின் ஷரியா சட்டங்களால் வீணாகிவிடுமே என்றுதான் நாட்டை விட்டு வெளியேறினோம். இதுவரை நான் விமானத்திலேயே ஏறியது இல்லை. என் முதல் பயணமே ராணுவ விமானத்தில் அமைந்துவிட்டது. இனி எப்போது என் சொந்த மண்ணைக் காண்பேனோ?' என்று உருகுகிறார் அவர்.

ஷபீர் அகமதி கடந்த வாரம் வரை ஒரு பத்திரிகையாளராக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார். தன் ஒன்பது உறவினர்களுடன் ஓர் விமானத்தில் இடம்பிடித்து ஏறி தாலிபான் பிடியில் இருந்து தப்பி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டுக்கு வந்துள்ளார். ‘நான் விமானத்தில் ஏறியதும் இறைவனுக்கு நன்றி சொன்னேன். ஆனால் ஆப்கனிலேயே இருக்கும் மக்களின் நிலை என்ன? தாலிபானுடன் சரியான ஒப்பந்தம் போட்டு அதன் பிறகு அமெரிக்கா விலகி இருக்கவேண்டும். ஆப்கன் மக்களை இப்படி அவர்கள் பிடியில் விட்டுவிட்டுச் சென்றிருப்பது சரியல்ல... எங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது,' என்று வருத்தப்படுகிறார் அவர்.

ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை வரலாறு அந்நியர் ஆக்கிரமிப்புகளால் நிறைந்திருக்கிறது. அலெக்சாண்டர் முதல் அமெரிக்கா வரை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளை அம்மண் பார்த்துள்ளது. தாலிபன்கள் போன்ற மதவாத சக்திகள் அம்மண்ணை ஆள்வது சரியான சுயநிர்ணயப் பாதையைத் தருமா? அமெரிக்கா வெளியேறிய நிலையில் அம்மண்ணை தங்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த நினைக்கும் பிற சக்திகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியுமா, கஜினி முகமதுவின் மண்ணால்?

செப்டம்பர், 2021

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com